25 சதவீத ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும் பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை

நடப்பு கல்வி ஆண்டில் கட்டாய கல்வி சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை மாவட்ட பள்ளி கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-08-21 02:32 GMT
விருதுநகர்,

மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை, எளிய மாணவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய அரசே செலுத்திவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அதிகபட்சமாக இடஒதுக்கீட்டில் 70.8 சதவீத ஏழை மாணவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர்.மாநில பள்ளிக்கல்வித்துறை முழுமையாக இடஒதுக்கீட்டின்படி ஏழை, எளிய மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

வாய்ப்பு உள்ளதா?

கடந்த கல்வி ஆண்டு வரை ஜூன் மாதம் அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கியபோதே கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை, எளிய மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை முறையாக கண்காணிக்காத நிலையே நீடித்தது. இதற்கு மாவட்ட பள்ளி கல்வித்துறை பல்வேறு காரணங்களை கூறி வந்தது. தற்போது கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு அரசு அனுமதித்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் மாணவர் சேர்க்கை விவரங்களை தெரிவித்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவரங்களை தெரிவிக்கவில்லை. களநிலவரப்படி தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதனை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை கண்காணிக்காதது ஏன் என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் மாணவர் சேர்க்கையை முடித்துவிட்ட தனியார் பள்ளிகள் கட்டாய கல்வி சட்டப்படி 25 சதவீத ஏழை, எளிய மாணவர்களை அனைத்து வகுப்புகளிலும், சேர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? என தெரியவில்லை.

கோரிக்கை

கட்டாய கல்வி சட்டத்தின்படி 25 சதவீத ஏழை, எளிய மாணவர்களை சேர்க்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க விதிமுறைகள் அனுமதிக்கும் வகையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை, எளிய மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அனுமதி அளிக்காத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதே நேரத்தில் மத்திய அரசும் அனுமதிக்கப்படும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை தாமதம் இல்லாமல் பட்டுவாடா செய்வதும் அவசியம் ஆகும்.

மேலும் செய்திகள்