காஞ்சீபுரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் சாவு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்

காஞ்சீபுரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-08-21 01:22 GMT
வாலாஜாபாத்,

காஞ்சீபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் சாயத்தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடை வழியாக சென்று கொண்டிருக்கிறது.

பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பாதாள சாக்கடைக்கான கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக வள்ளுவப்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 40) பணியமர்த்தப்பட்டார்.

அவர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்ய முற்பட்டபோது விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தார். அப்போது எதிர் வீட்டில் வசித்து வந்த சுனில் (26), லட்சுமணனை காப்பாற்ற கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க முயன்றார். அவரையும் விஷவாயு தாக்கியதால் உள்ளே மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காஞ்சீபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சீபுரம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கழிவுநீர் தொட்டியில் விழுந்து கிடந்த 2 பேரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் விஷவாயு தாக்கி லட்சுமணன், சுனில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த வாலாஜாபாத் போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது முன் அனுபவம் இல்லாதவர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியதே உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்