திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயற்சி - போலீசார் பிடித்து சென்ற தம்பியின் கதி என்ன? என கதறல்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்றார். அப்போது, போலீசார் பிடித்து சென்ற தம்பி எங்கே? என கதறி அழுதார்.

Update: 2020-08-19 22:15 GMT
திருச்சி,

ஸ்ரீரங்கம் போலீஸ் எல்லைக்குட்பட்ட திருவானைக்காவல் மேலகொண்டையம் பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். கார் டிரைவர். இவருக்கு ரெங்கநாதன் (வயது 20) என்ற மகனும், காயத்ரி (23) உள்பட 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமாரின் மனைவி இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து முத்துக்குமார் குழந்தைகளை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ரெங்கநாதன் மற்றும் அவருடைய 2 சகோதரிகளும் பெரியம்மா பரமேஸ்வரி பராமரிப்பில் இருந்து வந்தனர். ரெங்கநாதன் லால்குடியில் உள்ள இருசக்கர வாகன பட்டறையில் வேலைபார்த்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று பகல் ரெங்கநாதனின் அக்காள் காயத்ரி தனது பெரியம்மா பரமேஸ்வரியுடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் வந்தார். ஆட்டோவில் இருந்து இறங்கியதும் காயத்ரி, தான் பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாய்ந்து சென்று தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வந்து காயத்ரி மீது ஊற்றி போலீசார் ஆசுவாசப்படுத்தினர்.

அப்போது அவர், ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை என்ற பெயரில் தனது தம்பி ரெங்கநாதனை 18-ந்தேதி மதியம் பிடித்து சென்றனர். இதுவரை அவர் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்று தெரியவில்லை. ஸ்ரீரங்கம் போலீசில் கேட்டால், நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என்கிறார்கள்.

சாத்தான்குளம் சம்பவம்போல என் தம்பியை ஏதும் செய்து விட்டார்களோ? என சந்தேகமாக உள்ளது எனக்கூறி கதறி அழுதார். அங்கிருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் காயத்ரி கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 18-ந்தேதி எங்கள் வீட்டுக்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார் 5 பேர், வீட்டின் கதவுகளை எட்டி உதைத்தனர். வீட்டில் பீரோவில் உள்ள துணிமணிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட சாமான்களை விசிறியடித்து வீட்டை அலங்கோலப்படுத்தினர். பின்னர், வீட்டில் இருந்த என் தம்பி ரெங்கநாதனை அடித்து உதைத்து இழுத்து சென்றனர்.

என் தம்பிக்கு வேறு ஒரு வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதாவது 2 மாதம் தஞ்சாவூரில் தங்கி கையெழுத்திட வேண்டும் என்பதாகும். அதன்படி கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி ஜாமீனில் வெளிவந்த அவன், 2 மாதம் தஞ்சாவூரில் தங்கி விட்டு திருவானைக்காவல் வீட்டுக்கு கடந்த 9-ந்தேதிதான் வந்தான்.

அவன் மீது போலீசில் எவ்வித புகாரும் இல்லை. பின்னர் ஏன் போலீசார் பிடித்து சென்று விட்டு தற்போது இல்லை என்கிறார்கள். அவன் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவனை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இதுவரை அவன் எங்கிருக்கிறான் என்றும் தெரியவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்