கர்நாடகா சென்று மீன் பிடிக்க அனுமதி: மண்டபம் மீனவர்கள் திரளாக வந்து கோரிக்கை மனு
கர்நாடகாவின் மங்களூருவுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மண்டபம் மீனவர்கள் திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ராமநாதபுரம்,
மண்டபத்தைச் சேர்ந்த மீனவ தொழிலாளர்கள் ஏராளமானோர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மீன் துறை உதவி இயக்குனரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக மண்டபம், ராமேசுவரம் மற்றும் மண்டபம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூரு சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தோம். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாத காலமாக மீன் பிடி தொழில் செய்யாமல் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகி குடும்பம் நடத்தவே முடியாமல் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகிறோம்.
எனவே எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூரு சென்று மீன்பிடி தொழில் செய்ய அனுமதி வழங்கிட வேண்டும். அங்கு சென்று மீன்பிடி தொழில் செய்தால் மட்டுமே எங்களின் குடும்பத்தினரை காப்பாற்ற முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.