திண்டிவனத்தில் பயங்கரம்: மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் கொலை - கணவர் வெறிச்செயல்

திண்டிவனத்தில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

Update: 2020-08-19 23:30 GMT
திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் ரகுவரன்(வயது 30). கூலி தொழிலாளியான இவரும், அதேபகுதியை சேர்ந்த மகாலட்சுமி(28) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

மகாலட்சுமி, சென்னை திருவொற்றியூரில் உள்ள உறவினர் ராஜ் மகன் விக்னேஷ்(25) என்பவரது வீட்டில் தங்கி, டி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வந்தார். அப்போது அவருக்கும், விக்னேசுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டி.நகரில் உள்ள ஜவுளிக்கடை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் மகாலட்சுமி சொந்த ஊரான திண்டிவனத்துக்கு வந்து கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்தார். இருப்பினும் மகாலட்சுமி, தனது கள்ளக்காதலனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். அப்போது அவர், ஒரு முறை திண்டிவனத்திற்கு வந்து தன்னை பார்த்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

கள்ளக்காதலியின் அழைப்பை ஏற்று, விக்னேஷ் நேற்று திண்டிவனத்திற்கு வந்து, எல்லையில் காத்திருந்தார். அப்போது தனது கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றதும், மகாலட்சுமி செல்போனில் விக்னேசை வீட்டுக்கு வருமாறும் கூறினார்.

உடனே விக்னேஷ், கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்தார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வீட்டில் இருந்த குழந்தைகளும் விளையாடுவதற்காக வெளியே சென்று விட்டனர். 5 மாதங்களுக்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியில் இருவரும் உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருந்தனர். இதனிடையே வெளியே சென்றிருந்த ரகுவரன், திடீரென வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு, தனது மனைவியுடன் விக்னேஷ் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் ஆத்திரமடைந்த ரகுவரன் தனது மனைவியை ஆபாசமாக திட்டி தாக்கினார். இதைபார்த்த விக்னேஷ் அவரை தடுத்தார். இது அவருக்கு கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. விக்னேசையும் சரமாரியாக தாக்கிய ரகுவரன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது முதுகில் குத்தினார். உடனே விக்னேஷ், வீட்டை விட்டை விட்டு வெளியேறி தெருவில் ஓடினார். இருப்பினும் விடாமல் துரத்திச் சென்ற ரகுவரன், அவரை மீண்டும் கத்தியால் குத்தினார். இதில் அவரது முதுகு மற்றும் உடலில் படுகாயம் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். விக்னேஷ், இறந்ததை அறிந்ததும் ரகுவரன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாலச்சந்தர், திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீனிபாபு ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விக்னேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தப்பி ஓடிய ரகுவரன் நேற்று இரவு திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரகுவரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்