கள்ளக்குறிச்சி அருகே, லாரியில் கடத்திய 10¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி அருகே லாரியில் கடத்திய 10¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி அருகே முதலூர் பகுதியில் இருந்து லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக விழுப்புரம் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் கல்பனா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், லட்சுமிநாராயணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் முதலூருக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை 3 பேர், லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் அந்த லாரியை போலீசார் சோதனை செய்ததில் 205 மூட்டைகளில் 10 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் முதலூர் காமராஜர் தெருவை சேர்ந்த ஏழுமலை (வயது 38), கோட்டாலப்பாக்கத்தை சேர்ந்த சண்முகம் (30) என்பதும், தப்பி ஓடியவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சக்தி என்பதும், இவர்கள் 3 பேரும் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ஏழுமலை, சண்முகம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 88 ஆயிரம் மதிப்புள்ள ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சக்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.