‘குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறிதுநேரத்தில் இறந்து விட்டானே...’ போலீஸ்காரர் சுப்பிரமணியனின் தந்தை கண்ணீர் பேட்டி

‘குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறிது நேரத்தில் இறந்து விட்டானே...’ என்று போலீஸ்காரர் சுப்பிரமணியனின் தந்தை கண்ணீர் மல்க கூறினார்.

Update: 2020-08-19 23:30 GMT
ஏரல்,

வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியனின் பெற்றோர் பெரியசாமி (வயது 60)-பிச்சம்மாள் (57) ஆவர். விவசாயியான பெரியசாமிக்கு 4 மகன்கள், ஒரு மகள். இவர்களில் 3-வது மகனான சுப்பிரமணியன் போலீஸ்காரராக பணியாற்றினார்.

சுப்பிரமணியனுக்கு சித்தர் (38), பத்திரகாளிமுத்து (35) ஆகிய 2 அண்ணன்களும், லட்சுமி (30) என்ற அக்காளும், சிவபெருமாள் (25) என்ற தம்பியும் உள்ளனர். சிவபெருமாளை தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அனைவரும் உள்ளூரிலே வசித்து வருகின்றனர்.

சுப்பிரமணியனை தவிர மற்ற சகோதரர்கள் அனைவரும் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வரையிலும் படித்த சுப்பிரமணியன், கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று, 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார்.

சுப்பிரமணியனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புவனேசுவரியுடன் (25) திருமணம் நடந்தது. புவனேசுவரி முதுகலை பட்டதாரி ஆவார். இவர்களுக்கு சிவஹரிஷ் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. சுப்பிரமணியன் தன்னுடைய சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் பத்திரகாளிமுத்துவின் குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள கோவிலில் முடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தன்னுடைய மனைவி, குழந்தையுடன் பங்கேற்ற சுப்பிரமணியன் பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

தொடர்ந்து சிறிதுநேரத்தில் ரவுடி துரைமுத்து பதுங்கி இருந்த இடம் குறித்து தகவல் கிடைத்ததால், அவரை பிடிப்பதற்காக சுப்பிரமணியன் உடனே புறப்பட்டு சென்றார். ரவுடி துரைமுத்துவை மடக்கி பிடிக்க முயன்றபோது, அவர் வெடிகுண்டு வீசியதில் சுப்பிரமணியன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

இந்த நிலையில், மகனை பறிகொடுத்த பெரியசாமி கண்ணீர்மல்க கூறியதாவது:-

‘எங்கள் குடும்பத்தில் அனைவருமே விவசாயம் செய்து வருகிறோம். சுப்பிரமணியன் மட்டும் போலீஸ் பணியில் சேருவதற்காக சிறுவயதில் இருந்தே அதிக உடற்பயிற்சி செய்து, முயற்சி செய்து வந்தான். அவன் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவான். நண்பர்களுடன் கலகலப்பாக இருப்பான். அவனுக்கு அதிக நண்பர்கள் உண்டு.

சுப்பிரமணியன் போலீசில் சேர்ந்ததும், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் டிரைவராகவும், பின்னர் ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்திலும் பணியாற்றினான். அவன் கடைசியாக 2-வது அண்ணன் மகனின் முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றான். அங்கு சென்று விட்டு பணிக்கு திரும்பிய சுப்பிரமணியன் சிறிதுநேரத்தில் ரவுடியுடன் நடந்த மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டதில் இறந்து விட்டானே...‘ என்று கதறி அழுதவாறு கூறினார்.

சுப்பிரமணியனின் மறைவையொட்டி, பண்டாரவிளை, பண்ணைவிளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் 2 பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பண்டாரவிளையில் கிராம மக்கள் மாலையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சிறிதுநேரத்தில் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்