குழாய் உடைந்து குடிநீர் தேங்கிய இடத்தில் மீன் பிடிக்கும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்
திருப்பூர் 3-வது வார்டில் குழாய் உடைந்து குடிநீர் தேங்கிய இடத்தில் மீன் பிடிக்கும் போராட்டத்தை பொதுமக்கள் நடத்தினர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட தியாகி குமரன் காலனி 4-வது வீதியில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு தொடர்ந்து குடிநீர் வெளியேறி வீதியில் குளம் போல் தேங்கி உள்ளது. இந்த நிலையில் குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விஜயபுரி கார்டன் கிளை சார்பில் நேற்று சம்பந்தப்பட்ட இடத்தில் மீன் பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் வடக்கு ஒன்றிய தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இதையொட்டி அப்பகுதி பெண்கள் கைகளில் தூண்டில்களுடன் அங்கு தேங்கி உள்ள தண்ணீரில் மீன் பிடிப்பது போன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் ஒன்றிய குழு உறுப்பினர் இம்ரான், விஜயபுரி கார்டன் கிளை தலைவர் விக்னேஷ் மனோகரன், நிர்வாகிகள் அருண், சிவக்குமார், ஈஸ்வரன், சேக், மதன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் 1-வது மண்டல உதவி கமிஷனர் வாசுக்குமார் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்யுமாறு, குழாய் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் குழாய் ஆய்வாளர் மசாருதீன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் குழாய் உடைப்பை சரி செய்ததால், அந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 1 வாரமாக குடிநீர் வீணாகிய நிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்ததுடன், மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றியும் தெரிவித்தனர்.