சிறுவன் விழுங்கிய பல் மூச்சுக்குழாயில் சிக்கியது - மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அகற்றினர்

7 வயது சிறுவன் விழுங்கிய பல் மூச்சுக்குழாயில் சிக்கியது. அதனை மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அகற்றினர்.

Update: 2020-08-18 22:15 GMT
மதுரை,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அரியாண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் பாலராகவன்(வயது 7). இந்த சிறுவனுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன. இதனை தொடர்ந்து அவனை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கும் குணமாகாததால் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது, அந்த சிறுவன் தன்னுடைய பல் ஒன்றை விழுங்கி விட்டதாக டாக்டர்களிடம் தெரிவித்தான்.

உடனே டாக்டர்கள், ஸ்கேன் செய்து பார்த்தபோது சிறுவனின் வலது நுரையீரலுக்கான மூச்சுக்குழாயில் அந்த பல் அடைத்து இருப்பது தெரியவந்தது. எனவே மேல்சிகிச்சைக்காக கடந்த 27-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைகள் நலப்பிரிவில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மதுரை அரசு ஆஸ்பத்திரி காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு துறை தலைவர் டாக்டர் தினகரன் தலைமையில், மயக்கவியல் துறை டாக்டர்கள் உதவியுடன் ‘பிராங்கோஸ்கோப்பி’ எனும் சிகிச்சை மூலமாக மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த பல் வெளியில் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த சிறுவனுக்கு நுரையீரல் கிருமி தொற்றுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு, சிறுவன் முற்றிலும் குணம் அடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

சிறுவனுக்கு தேவையான சிகிச்சைகள் அளித்த குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் பாலசங்கர், காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் டாக்டர் தினகரன், பேராசிரியர் அருள் மற்றும் மயக்கவியல் துறை டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினரை மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி பாராட்டினார்.

மேலும் செய்திகள்