ஆவணி அமாவாசையையொட்டி சதுரகிரி மலை அடிவாரத்தில் குவிந்த பக்தர்கள்
ஆவணி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி மலை அடிவாரத்தில் பக்தர்கள் குவிந்தனர்.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 4 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆவணி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால் மலை அடிவாரத்திலேயே தாணிப்பாறை கேட்டின் முன்பு பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அடிவார பகுதியிலேயே முடிக்காணிக்கை செலுத்தியும், அருகே உள்ள தோப்பு பகுதியில் ஆடு, கோழிகளை பலி கொடுத்து சமைத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.