மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு வெளி மாநில வாகனங்களை திருப்பி அனுப்பினர்

முழு ஊரடங்கையொட்டி மாநில எல்லைகளில் போலீசார் அதிரடியாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வெளி மாநில வாகனங்களை திருப்பி அனுப்பினர்.

Update: 2020-08-19 00:53 GMT
பாகூர்,

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் நாளான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி மாநில எல்லை பகுதிகளான முள்ளோடை, மதகடிப்பட்டு, சேதராப்பட்டு, கனகசெட்டிக்குளம் பகுதிகள் சீல் வைக்கப்பட்டன.

முள்ளோடையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், தன்வந்திரி மற்றும் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழக மாவட்டமான கடலூரில் இருந்து உரிய அனுமதி இன்றி வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். மருத்துவ தேவைக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் முக்கிய சாலைகளிலும் இரும்புத் தட்டிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. கிராமப்புற சாலைகளிலும் மூடப்பட்டு இருந்ததால் வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன.

வில்லியனூர் மாடவீதி, மார்க்கெட், புறவழிச்சாலை, நான்குமுனை சந்திப்பு ஆகிய பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன. கிராமப்புறங்களான கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், மடுகரை ஆகிய பகுதிகளில் கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தன. சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன.

திருபுவனை, மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில் ஆகிய பகுதிகளும் வெறிச்சோடின. மாநில எல்லையான மதகடிப்பட்டில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். விழுப்புரம் பகுதியில் இருந்து வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர்.

திருக்கனூர் கடைவீதியில் ஒருபுறம் புதுச்சேரி மாநில பகுதியும், மற்றொருபுறம் விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டு பகுதியும் உள்ளது. முழு ஊரடங்கு காரணமாக புதுவை எல்லைக்குட்பட்ட திருக்கனூர் பகுதியை சேர்ந்த ஒரு பக்க கடைகள் மட்டும் மூடப்பட்டு இருந்தன. எதிர்புற கடைகளில் வழக்கம்போல் வியாபாரம் நடந்தது.

மேலும் செய்திகள்