அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியது

கோவை மாவட்டத்தில் நேற்று முதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

Update: 2020-08-18 05:49 GMT
கோவை,

கொரோனா தொற்று காரணமாக ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் தள்ளிப்போகிறது. அத்துடன் 2020-21-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் 1, 6 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதற்கான பிற வகுப்பு மாணவர் சேர்க்கையும் நேற்று முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. கோவையில் ராஜவீதி துணி வணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒப்பணக்கார வீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, நியூசித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

மாணவ-மாணவிகள் காலை 9 மணியில் இருந்தே பள்ளிகளுக்கு ஆர்வத்துடன் வந்தனர். அப்போது அவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றினர். ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு அமர்ந்து இருந்தனர்.

அத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள், அவருடைய பெற்றோருக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கைகளை சுத்தம் செய்வதற்காக பள்ளிகளில் சோப்பு மற்றும் கிருமி நாசினி, தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, மாணவர் சேர்க்கையின் முதல் நாளான நேற்று சேர்க்கை படிவம் பூர்த்தி செய்யப்பட்டு மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்டனர். மேலும் விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு, சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஒரு சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்னும் சீருடை அனுப்பப்படவில்லை. அவ்வாறு சீருடை கிடைக்காத மாணவ -மாணவிகளுக்கு பின்னர் வழங்கப்படும் என்றனர்.

எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தின் சார்பில் கோவை சரவணம்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்த மாணவர் சேர்க்கையினை எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட அதிகாரி கீதா தொடங்கி வைத்தார். இந்த மாணவர் சேர்க்கையில் 1 வகுப்பில் 12 குழந்தைகளும், 3-ம் வகுப்பில் 5 குழந்தைகளும், 5-ம் வகுப்பில் 3 குழந்தைகளும் என 20 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இவர்களுக்கு பள்ளியின் சார்பில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் புத்தகங்கள், புத்தகப்பை ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் தர்மராஜன் கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் கலாமணி உட்பட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

சூலூர் வட்டார அரசு தொடக்க பள்ளி, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில், மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் ஆர்வமாய் கலந்து கொண்டனர். மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்று சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்