மேலும் 6 மாவட்டங்களில் பிளாஸ்மா சிகிச்சை மையம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் பிளாஸ்மா சிகிச்சை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2020-08-17 22:30 GMT
சிவகங்கை,

தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிவகங்கை பழைய மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களை கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவக்கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர்கள் யசோதாமணி மற்றும் யோகவதி ஆகியோர் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து சிவகங்கையில் கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 42 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் நோய் தொற்றுள்ள 2 ஆயிரத்து 823 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இது தவிர 234 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இங்கு நோயாளிகளுக்கு விலை உயர்ந்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87 சதவீதமாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை இந்தியாவில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,115 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் பொது சுகாதாரத்துறைக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 மாத காலத்தில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் என 15 ஆயிரம் பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை கருவி தற்போது ஒன்று மட்டுமே உள்ளது. கூடுதலாக மேலும் ஒரு பரிசோதனை கருவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் மதுரை, நெல்லை ஆகிய 3 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 6 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. கடந்த 5 மாத காலத்தில் தனியார் மருத்துவமனையையே நம்பி இருந்த பல லட்சம் பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அரசு மருத்துவமனைதான் சிறப்பான சிகிச்சையை வழங்கி வருகிறது என்ற மன நிலை எல்லோரது மனதிலும் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தமிழகத்திற்கு முன்னோடியாக செயல்பட்டு பழைய அரசு மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க உத்தரவிட்டு அதன் அடிப்படையில் இந்த மாவட்டத்தில் திருப்பத்தூர் சுவிடன் மிஷின் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் வர வேண்டாம். 99 சதவீதம் அவ்வாறு ஏற்படவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், சிவகங்கை முன்னாள் எம்.பி. செந்தில்நாதன், அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பு மருத்துவர்கள் மீனா, முகமதுரபீ, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அசோகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆனந்தன், சசிக்குமார், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்