பெங்களூரு வன்முறை சம்பவத்தில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - எடியூரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

பெங்களூரு டி.ஜே.ஹள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்தில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது எனவும், அவர்களிடம் இருந்து சேதமடைந்த சொத்துகளுக்கான இழப்பீடு தொகையை வசூலிப்பது எனவும் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடந்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-08-17 23:30 GMT
பெங்களூரு,

பெங்களூரு புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அகண்ட சீனிவாசமூர்த்தியின் சகோதரி மகன் நவீன்(வயது 27). சிறுபான்மையினருக்கு எதிராக முகநூலில் நவீன் கருத்து பதிவிட்டு இருந்தார். இதன் காரணமாக கடந்த 11-ந் தேதி இரவு பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் வன்முறை வெடித்தது. இதில், அகண்ட சீனிவாசமூர்த்தி, அவரது உறவினர்களின் வீடுகளுக்கும், டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கும் மர்ம நபர்கள் தீவைத்தனர். பொதுமக்கள் மற்றும் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், ஏராளமான வாகனங்களையும் மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர்.

இதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் வன்முறை குறித்து டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வன்முறை சம்பவத்தில் காங்கிரஸ் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு இடையிலான மோதலே காரணம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் இடையேயும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி வன்முறை குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று காவேரி இல்லத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, தலைமை செயலாளர் விஜய பாஸ்கர், உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் ரஜனிஷ் கோயல், மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வன்முறை தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டவர்கள், வன்முறைக்கான முக்கிய காரணம் உள்ளிட்டவை குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் முதல்-மந்திரி எடியூரப்பா கேட்டு அறிந்து கொண்டார். அதே நேரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் எந்தவிதமான பாரபட்சமும் காட்ட வேண்டாம் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு எடியூரப்பா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக வன்முறையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு மற்றும் தனியார் சொத்துகள் சேதம் அடைந்திருப்பதால், அதனை வன்முறையில் ஈடுபட்டு கைதானவர்களிடம் இருந்து வசூலிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த வன்முறையின்போது, அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும், வன்முறையாளர்களிடம் இருந்தே நஷ்ட தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். அதுபோல, டி.ஜே.ஹள்ளியில் நடந்த வன்முறையில் சேதம் அடைந்த சொத்துகளின் மதிப்பை கணக்கிட்டு, அதனை கைதானவர்களிடம் இருந்து வசூலிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவடகியிடம் முதல்-மந்திரி எடியூரப்பா கேட்டு அறிந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“பெங்களூரு டி.ஜே.ஹள்ளியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை நடத்துவதற்கோ, அந்த அமைப்புகளின் விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்தோ எந்தவிதமான ஆலோசனையும் நடைபெறவில்லை. வன்முறையின் போது நடந்த துப்பாக்கி சூடு குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது வன்முறை குறித்து டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலேயே இந்த வன்முறை குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும். நமது போலீசார் சிறப்பான முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய இரவு, பகல் பார்க்காமல் உழைத்து வருகிறார்கள். எனவே இந்த விசாரணையே தொடர்ந்து நடைபெறுவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்தே இழப்பீடு தொகையை வசூலிக்க முதல்-மந்திரி எடியூரப்பாவும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வன்முறையாளர்களிடம் இருந்தே இழப்பீடு தொகை வசூலிக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. அதனால் வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இழப்பீடு தொகை வசூலிப்பது தொடர்பாக இழப்பீட்டை மதிப்பீடு செய்ய அதிகாரியை நியமிக்கும்படி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும். ஐகோர்ட்டு உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி இழப்பீடு வசூலிக்கப்படும்.

வன்முறையாளர்கள் மீது எந்தவிதமான பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்குமாறு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். அதனால் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். அவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் ஏதும் இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்கப்படும். வன்முறையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் (சட்டப்பிரிவு யூ.ஏ. பி.ஏ.) வழக்குப்பதிவு செய்யப்படும். வன்முறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவோ ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.” இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்