கொரோனா ஊரடங்கால்: பனைநார் கட்டில் பின்னும் தொழில் பாதிப்பு - தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை

கொரோனா ஊரடங்கு காரணமாக, பனைநார் கட்டில் பின்னும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-08-17 22:00 GMT
உடன்குடி,

கொரோனா ஊரடங்கு காரணமாக, பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டாலும், பொதுப்போக்குவரத்து முடங்கியதால், கைத்தொழில்களும் நசிந்து வருகின்றன. கருப்புக்கட்டிக்கு பிரசித்தி பெற்ற உடன்குடி பகுதியில் பனைநார் கட்டில் பின்னும் தொழிலும் சிறந்து விளங்குகிறது. ‘கற்பகதரு’வான பனை மரத்தின் நுனி முதல் அடி வரையிலும், மக்களின் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுகிறது.

பனைமர ஓலை மட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நாரின் மூலம், கட்டில் பின்னல் செய்து விற்பனை செய்வது வழக்கம். இந்த பனைநார் கட்டிலில் தூங்குவதன் மூலம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. கோடை காலங்களில் பனைநார் கட்டில் குளுமையாகவும், மழைக்காலங்களில் வெதுவெதுப்பாகவும் தானாகவே மாறும் தன்மை கொண்டது.

கடந்த சில ஆண்டுகளாக பனைமரங்கள் வேகமாக அழிக்கப்படுவதால், பனைத்தொழிலும் நலிவடைந்து வருகிறது. மேலும் பனைநார் கட்டில் தயாரிப்பதற்கு தேவையான நாரும் போதிய அளவு கிடைக்காததால், கட்டில் பின்னும் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடன்குடி வடக்கு பஜாரில் பனைநார் கட்டில் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ள கோபால் கூறியதாவது:-

முன்பு திருமண விழாக்களில் சீர்வரிசையாக பனைநார் கட்டிலை வழங்குவது வழக்கம். தற்போதும் சிலர் பழமையின் மகத்துவத்தை உணர்ந்து பனைநார் கட்டிலை சீர்வரிசையாக வழங்கி வருகின்றனர். இதற்காக அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் போன்றவற்றில் வெளியூர்களுக்கு பனைநார் கட்டில்களை அனுப்பி வைப்போம். முழுவதும் பனைநாரால் செய்த கட்டிலை ரூ.5 ஆயிரத்துக்கும், கட்டில் சட்டங்களை தேக்கு மரத்தில் செய்தால் ரூ.7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்து வந்தோம். பனைநார் கட்டில்களை மடக்கி வைத்து கொள்வது போன்றும் தயாரித்து விற்பனை செய்கிறோம்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, பனைநார் கட்டில்களை வெளியூர்களுக்கு அனுப்புவதில் சிரமம் உள்ளது. பணப்புழக்கம் குறைவு காரணமாக, பனைநார் கட்டில் விற்பனையும் குறைந்துள்ளது. இதனால் பனைநார் கட்டில் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வறுமையில் வாடுகின்றனர். எனவே பனைநார் கட்டில் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்