குமரியில் புதிய உச்சம்: இன்ஸ்பெக்டர் உள்பட 162 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி - பாதிப்பு 7,500-ஐ தாண்டியது

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் இன்ஸ்பெக்டர் உள்பட 162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 4 பேர் இறந்தனர்.

Update: 2020-08-17 06:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தினமும் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 100 முதல் 150-க்கும் மேலாக உள்ளது. அதோடு பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.

குமரியில் நேற்று முன்தினம் வரை 133 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்தது.

அதாவது நெல்லை மாவட்டம் பெருங்குடி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய வாலிபர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதேபோல நாகர்கோவில் வடசேரி ஓட்டுப்புரை தெருவை சேர்ந்த 61 வயது பெண், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 46 வயது ஆண் மற்றும் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 73 வயது முதியவர் என மொத்தம் 4 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.

கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கடந்த 3 நாட்களாக சளி, காய்ச்சால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு நேற்று வெளியான நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர் உள்பட 161 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், கொரோனா கவனிப்பு மையங்களிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 359 ஆக இருந்தது. நேற்று புதிதாக 162 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 521 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்