காரைக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு
காரைக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
காரைக்குடி,
காரைக்குடி பழைய அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் குறித்தும் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாஸ்கரன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக அவர்களை சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதா மணி உள்பட டாக்டர்கள் வரவேற்றனர்.
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை, அமராவதிபுதூர் அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனாவிற்கான சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இதற்காக 2,115 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகமான அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 42 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து பரிசோதனை நடைபெறும். இதுவரை மாவட்டத்தில் 2,823 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சையில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகம்பேர் குணமடைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தற்போது 20 சித்தா மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்திற்கு ஒரு சித்தா மையம் செயல்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்தா சிகிச்சை முறையும் நல்ல பலனை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சருடன் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், ஆவின் சேர்மன் கே.ஆர். அசோகன், நகர செயலாளர் மெய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.