முழு ஊரடங்கால் வேலூர் மாநகரம் வெறிச்சோடியது தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு

வேலூர் மாநகர பகுதியில் மருந்துக்கடைகளை தவிர அனைத்துக்கடைகளும் முழு ஊரடங்கால் மூடப்பட்டன. போக்கு வரத்தின்றி சாலைகள் வெறிச்சோடியது. தேவையின்றி மோட்டார் சைக்கிள்களில் சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Update: 2020-08-17 02:28 GMT
வேலூர், 

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்த மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப் படுகிறது. 3-வது ஞாயிற்றுக் கிழமையான நேற்று வேலூர் மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப் பட்டது. மருந்துக்கடைகளை தவிர மளிகை, காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் முடப்பட்டு இருந்தன. ஒருசில பெட்ரோல் பங்குகள் மட்டுமே இயங்கின.

மாநகராட்சி பகுதியில் டீக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் திறக்கப்பட வில்லை. அதனால் சிகிச்சைக் காக வேலூருக்கு வந்த வடமாநிலத்தவர்கள் மற்றும் உணவுக்காக ஓட்டல்களை சார்ந்திருந்தவர்கள் சிரமத் துக்கு ஆளாகினர். சாலை யோரம் வசிக்கும் ஆதர வற்ற நபர்களுக்கு பாகாயம் ஆனந்த்நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உணவு தயாரித்து அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று உணவு மற்றும் குடிநீரை வழங்கினர்.

வெறிச்சோடி காணப்பட்டது

போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் ஆட்டோக்கள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. மேலும் மாவட்ட, மாநில சோதனைச் சாவடிகள் மற்றும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

வேலூர் மாநகராட்சி பகுதியில் காலை நேரத்தில் வாகனப் போக்குவரத்து காணப்பட்டது. வேலூர் அண்ணாசாலை மற்றும் ஆரணி, ஆற்காடு, காட்பாடி சாலைகள், கிரீன்சர்க்கிள், கலெக்டர் அலுவலக மேம் பாலம் பகுதி மற்றும் மக்கான், நேஷனல், காமராஜர் சிலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மைய சந்திப்பு பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட் டது.

அபராதம் விதிப்பு

முழு ஊரடங்கை அமல்படுத்தவும், தேவையின்றி மோட்டார் சைக்கிள்கள், கார்களில் சுற்றித்திரியும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்துப் போலீசார் மாநகராட்சியின் முக்கிய பகுதிகளான கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே, கிரீன் சர்க்கிள், திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், தொரப்பாடி எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்பட பல்வேறு இடங்களில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது தேவையின்றி மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கை மீறி இயங்கிய மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்