விழுப்புரத்தில் பரபரப்பு: துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை - ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விபரீத முடிவு?

விழுப்புரத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அவர் இந்த விபரீத முடிவுக்கு சென்றாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-08-16 23:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் ஏழுமலை(வயது 25). பட்டதாரியான இவர், கடந்த 2017- ம் ஆண்டு 2-ம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டார். முதலில் இவர், சென்னையில் பணி செய்து வந்தார்.

பின்னர் பணிமாறுதல் பெற்று, 2019-ம் ஆண்டு முதல் விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகத்தில் ஏழுமலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக அவருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டு இருந்தது. தினமும் பணி முடிந்ததும் அந்த துப்பாக்கியை உரிய போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைத்து செல்வது வழக்கம்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பணிநேரம் முடிவடைந்ததும் ஏழுமலை காகுப்பம் காவலர் குடியிருப்பில் ஓய்வெடுக்க சென்றுள்ளார். அப்போது, செஞ்சி பகுதியில் முழு ஊரடங்கு பாதுகாப்பு பணிக்கு செல்லுமாறு அவருக்கு ஆயுதப்படை கட்டுபாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஏழுமலை பாதுகாப்பு பணிக்கு போகவில்லை. இதனிடையே, காலை வரை துப்பாக்கியை ஒப்படைக்காத ஏழுமலையை ஆயுதப்படை அதிகாரிகள், அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், செல்போன் அணைத்து (சுவிட்ச் ஆப்) வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் காலை 8.30 மணியளவில் குடியிருப்பு பகுதியில் இருந்து திடீரென்று துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. ஆனால், இதனை யாரும் பொருட்படுத்த வில்லையாம். ஏனெனில் மது கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அங்கு அதிகளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்களில் டயர் வெடித்திருக்கும் என்று அங்கு வசிப்பவர்கள் நினைத்து கொண்டனர்.

இதற்கிடையே நீண்ட நேரமாகியும் ஏழுமலை பணிக்கு வராததால், ஆயுதப்படை போலீசார் மீண்டும் அவரது அறைக்கு சென்றனர். ஆனால் அந்த அறையின் ஜன்னல்கள், கதவு ஆகிய மூடப்பட்டிருந்தன. நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர், அருகில் உள்ள ஜன்னலை உடைத்து பார்த்தபோது ஏழுமலை தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடல் அருகில் துப்பாக்கி கிடந்தது. இதன் மூலம் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியந்தது.

இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழுமலை ஆன்லைனில் சீட்டு விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் சூதாட்டத்திற்கு அடிமையாகி எந்நேரமும் அதில் மூழ்கி விட்டார். இதற்காக அவர், தனது நண்பர்கள், உறவினர்களிடம் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். தற்போது கடன் கொடுத்தவர்கள், தங்களுக்கு பணத்தை திரும்பி தருமாறு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதே வேளையில் அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்