தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் சென்னையில், கடைகள் அடைப்பு வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் சென்னையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் ஓடாததால் சாலைகளும் வெறிச்சோடின.

Update: 2020-08-16 23:03 GMT
சென்னை, 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது.

சென்னையில் ஏற்கனவே முழு ஊரடங்கின்போது 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடந்த மாதம் 5, 12, 19, 26-ந்தேதிகளிலும், இந்த மாதம் 2, 9-ந்தேதிகள் என 8 முறை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் சென்னையில் 9-வது முறையாக தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது.

கடைகள் அடைப்பு

இதனால் சென்னையில் உள்ள அனைத்து மளிகை கடைகள், ஓட்டல்கள், துணிக்கடைகள், விளையாட்டு பொருட்கள் விற்பனையகங்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நகரின் வர்த்தக பிரதேசம் என அழைக்கப்படும் தியாகராய நகரில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத ரங்கநாதன் தெரு ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் காட்சியளித்தது.

அதேபோல பாண்டி பஜார், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, புரசைவாக்கம், அண்ணா நகர், பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு ஆள் அரவமற்ற நிலையில் காட்சி தந்தது.

வெறிச்சோடிய சாலைகள்

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக மெரினா காமராஜர் சாலை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை, சேப்பாக்கம் வாலாஜா சாலை, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை, கிண்டி சர்தார் படேல் சாலை, சென்டிரல் வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டன. இணைப்பு சாலைகளும் மூடப்பட்டன. சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் நேற்று வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அதேபோல வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது. அத்தியாவசிய தேவைகள் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டன. அதேபோல மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்