கோவையில் சுதந்திர தினவிழா: கலெக்டர் ராஜாமணி தேசிய கொடி ஏற்றினார்

கோவையில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் ராஜாமணி தேசிய கொடி ஏற்றினார்.

Update: 2020-08-15 22:30 GMT
கோவை,

74-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவையில் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு நேற்று காலை 8.50 மணியளவில் கலெக்டர் ராஜாமணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மூவர்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர் கொரோனா தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு வாகனத்தில், போலீஸ் துணை கமிஷனர் உமா தலைமையில் அளிக்கப்பட்ட போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் காளிதாஸ், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன், வருவாய் கோட்டாட்சியர்கள், மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசார் உள்பட 90 பேருக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் கவுரவித்தார்.சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுடைய வீட்டிற்கே சென்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

கொரோனா காரணமாக சுதந்திர தின விழாவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படவில்லை. குறைந்த அளவிலான முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவுக்கு வந்த அனை வருக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. விழாவில், அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர். இதில் மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா, டி.ஐ.ஜி. நரேந்திரன்நாயர், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின், வருவாய் கோட்டாட்சியர்கள் தனலிங்கம், சுரேஷ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், துணை தலைவர் அமுல் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்