சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 6 பேர் பலி
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள்.
சேலம்,
நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த 48 வயது பெண்ணுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் குமாரபாளையத்தை சேர்ந்த 67 வயது மூதாட்டி மற்றும் பள்ளிபாளையத்தை சேர்ந்த 61 வயது முதியவர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் 3 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் உடல் நலக்குறைவால் கடந்த 11-ந் தேதி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.
தர்மபுரியை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர் சளி, காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்தபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் 70 வயது முதியவர் கடந்த 10-ந் தேதி காய்ச்சல் மற்றும் இருமல், சுவாச பிரச்சினை காரணமாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முடிவில் முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பலியானார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.