அரியலூரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு - பெரம்பலூரில் 26 பேருக்கு தொற்று

அரியலூரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. பெரம்பலூரில் நேற்று 26 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2020-08-15 21:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மணக்கால் காலனி தெருவை சேர்ந்த பிச்சைமுத்து (வயது 56) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 17 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 24 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்குபட்ட பகுதிகளில் 5 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கும் என மொத்தம் 73 பேர் புதிதாககொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,715 ஆக உயர்ந்துள்ளது. 1,238 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 460 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 228 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று, பெரம்பலூர் வட்டாரத்தில் 13 பேருக்கும், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் தலா 3 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் 7 பேருக்கும் என மொத்தம் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் தேர்தல் பிரிவு அலுவலரும், போக்குவரத்து போலீஸ்காரரும், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் 2 பேரும் அடங்குவர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 889 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 679 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் தற்போது 200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 223 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்