நெல்லை, தூத்துக்குடியில் கொரோனாவுக்கு 5 பேர் பலி தென்காசியில் 87 பேருக்கு தொற்று

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள்.

Update: 2020-08-16 01:34 GMT
தூத்துக்குடி,

நெல்லை மாவட்டத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் 7,398 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5,805 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,478 பேர் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரி மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

5 பேர் பலி

அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கொரோனாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுதவிர பாளையங்கோட்டையை சேர்ந்த 70 வயது முதியவர், வீரவநல்லூர் அருகே உள்ள அரிகேசவநல்லூரை சேர்ந்த 67 வயது முதியவர் மற்றும் பேட்டையை சேர்ந்த 55 வயது ஆண் என 3 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளது. நேற்று மாவட்டத்தில் 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 556 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,227 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். நேற்று தூத்துக்குடியை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 87 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,814 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,380 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,367 பேர் தென்காசி, நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்