போலீசார் தாக்கியதில் தமிழர் உயிரிழந்த சம்பவத்தில் 4 போலீசார் பணி இடைநீக்கம்

போலீசார் தாக்கியதில் தமிழர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2020-08-15 20:37 GMT
மும்பை,

மும்பை வில்லே பார்லே முத்துசுவாமி தெருவை சேர்ந்தவர் ராஜூ வேலு (வயது22). தமிழரான இவர் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊடரங்கு விதிக்கப்பட்ட சமயத்தில் வெளியே நடமாடியதாக தெரிகிறது.

அப்போது ஜூகு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வந்த சந்தோஷ் தேசாய், ஆனந்த் கெய்க்வாட், திகம்பர் சவான், அங்குஷ் பால்வே ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். வெளியே நடமாடிய ராஜூ வேலுவை கண்ட போலீசார் அவரை பிடிக்க விரட்டி சென்றனர். இதனை கண்ட அவர் போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்க கட்டிடத்தின் மேற்கூரை மீது ஏறினார். அப்போது அவரது கால் வழுக்கியதால் தவறி கீழே விழுந்தார்.

இதையடுத்து விரட்டி வந்த போலீசார் 4 பேரும் சேர்ந்து ராஜூவேலுவை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் மயங்கினார்.

பணி இடைநீக்கம்

இதனால் போலீசார் ரோந்து வேனில் ஏற்றி அவரை கூப்பர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே ராஜூ வேலு உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் போலீசார் தாக்கியதில் தான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் சம்பந்தப்பட்ட 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்ததுடன், அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்