கடலூரில், நாளை சுதந்திர தின விழா: கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தேசியக்கொடி ஏற்றுகிறார் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கடலூரில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தேசியக்கொடி ஏற்றுகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-08-14 05:15 GMT
கடலூர், 

நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சுதந்திர தின விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் இந்த முறை கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் விழாவில் கூட்டத்தை தவிர்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 10 வயதுக்கு குறைவான சிறுவர்களும், 60 வயதை தாண்டியவர்களும் விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இது தவிர விழாவில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

முக கவசம் அணியாமல் வந்தால் விழாவில் பங்கேற்க முடியாது. மேலும் விழாவுக்கு வரும் அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யவும், சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் போலீசாரின் அணிவகுப்பு ரத்து செய்யப்படவில்லை. வழக்கம் போல் இந்தாண்டும் போலீசாரின் அணிவகுப்பு நடைபெறும்.இதற்காக கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, திறந்த ஜீப்பில் ஏறி மைதானத்தை சுற்றி வந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உடனிருந்தார்.

பின்னர் மோப்ப நாய்கள் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மோப்ப நாய் அர்ஜூன், தீப்பந்தத்துக்குள் புகுந்து சாகசம் புரிந்தது. இதனை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டார். சுதந்திர தின விழாவில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ரெயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிதம்பரம் ரெயில்வே நிலைய போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் நேற்று நடைபாதை, தண்டவாள பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்