பெங்களூருவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை தேவேகவுடா வலியுறுத்தல்
பெங்களூருவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களுக்கு எதிரான சட்டங்களை திருத்தம் செய்து நிறைவேற்றி வருகிறது. ஏ.பி.எம்.சி. திருத்த சட்டத்தாலும், நிலச்சீர்திருத்த சட்ட திருத்தத்தாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதுபற்றி ஏற்கனவே நான் பலமுறை கூறியுள்ளேன். அந்த 2 சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது. அந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். அந்த சட்ட திருத்தங்களுக்கு எதிராக ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
அதன்படி, நாளை (அதாவது இன்று) 2 சட்ட திருத்தங்களுக்கு எதிராக ஹாசன் மாவட்டத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் எனது தலைமையில் பா.ஜனதா அரசை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளது. இதுபோல, மாநிலத்தில் 30 மாவட்டங்களின் தலைநகரிலும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் என்னால் செல்ல முடியாது. அதனால் அந்தந்த மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மந்திரிகள், கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்துவார்கள்.
சட்டப்படி நடவடிக்கை
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளியில் வன்முறை ஏற்பட்டுள்ளது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக அரசு மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ., இந்த வன்முறை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். வன்முறை குறித்து எந்த அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை சரியாக கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்முறை தொடர்பாக இதுவரை 150 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் வன்முறையில் ஈடுபட்டார்களா? என்பது விசாரணையில் தான் தெரியவரும். அதனால் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் காட்டாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு வன்முறையின் போது தீவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுபோன்று வேறு எங்கும் ஒரு எம்.எல்.ஏ. வீட்டுக்கு தீவைத்த சம்பவம் நடந்ததில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.