சேலத்தில், கொரோனாவுக்கு 7 பேர் பலி

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் பலியானார்கள்.

Update: 2020-08-12 22:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நாள்தோறும் உயிரிழப்புகளும் ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதில் குறிப்பாக வயதானவர்கள் அதிகமாக இறக்கின்றனர். இதனால் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அடிக்கடி அறிவுறுத்தி கொண்டே வருகின்றனர்.

இந்தநிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 7 பேர் பலியாகி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 51 வயதுடைய ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி ஒருவரும், 70 வயதுடைய முதியவர் ஒருவரும் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் நேற்று பரிதாபமாக இறந்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 78 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

சேலம் பெரமனூர் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய மூதாட்டி ஒருவரும் கொரோனாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்