தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி குடவாசல் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

Update: 2020-08-12 22:15 GMT
குடவாசல்,

ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களை பணி விதிகளுக்கு புறம்பாக பணி ஓய்வு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். திருவீழிமிழலை ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓராண்டு காலமாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். ஊராட்சிகளில் சுகாதார பணியை மேம்படுத்த சிறப்பு நிதி வழங்க வேண்டும்.

ஊராட்சி பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு தரமான முக கவசம், கையுறை, காலணி, சானிடைசர் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முகவர்கள் சங்கம் சார்பில் குடவாசலில் உள்ள ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு காத்தலிங்கம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் கிருத்துவதாஸ், முத்துகிருஷ்ணன், புஷ்பாமோகன், மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சம்மேளன மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், தூய்மை காவலர் சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் லட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராமதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்