கொரோனா பாதித்த கணவர் சாவில் மர்மம்: உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் - அரசு அதிகாரியிடம் பெண் வலியுறுத்தல்

கொரோனா பாதித்த கணவர் சாவில் மர்மம் இருப்பதால் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் பெண் வலியுறுத்தினார்.

Update: 2020-08-12 22:30 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நேரு நகரை சேர்ந்தவர் சலீம். இவருடைய மனைவி சர்மிளா. இவர் தனது உறவினர்களுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். பின்னர் சர்மிளா, கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் சலீம் பட்டுக்கோட்டையில் நகைக்கடை நடத்தி வந்தார். கடந்த மாதம் 23-ந் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் எனது கணவரை தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதனால் அந்த மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். திடீரென 29-ந் தேதி மூச்சு திணறல் காரணமாக இறந்து விட்டதாகவும், தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்ய வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி பட்டுக்கோட்டை பள்ளிவாசலில் அடக்கம் செய்து விட்டோம்.

கொரோனாவால் இறந்தாக சொல்லப்படும் எனது கணவர் சலீம் உடலை 12 மணி நேரம் தாமதமாக எங்களிடம் வழங்கப்பட்டதற்கு எவ்வித காரணமும் தெரிவிக்கவில்லை. அவரது உடல் உறுப்புகள் களவாடப்பட்டதோ என நான் அஞ்சுகிறேன். என் கணவரின் இறப்பின் தன்மை குறித்து அறிய உடலை தோண்டி எடுத்து மருத்துவக்குழு மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று(வியாழக்கிழமை) கலெக்டரை நேரில் சந்திக்க வருமாறு சர்மிளா மற்றும் உறவினர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் கூறும்போது, எங்களிடம் எந்த புகாரும் தெரிவிக்காமல் திடீரென இத்தனை நாட்கள் கழித்து புகார் தெரிவித்து இருப்பதால் பிறரின் தூண்டுதல் காரணமாக புகார் தெரிவித்து இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. மருத்துவ ஆவணங்களை விசாரணை குழுவிடம் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்