ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு: உண்மை காரணத்தை கூறினாலும் இ-பாஸ் கிடைப்பதில்லை - கால் டாக்சி உரிமையாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உண்மையான காரணத்தை கூறினாலும் இ-பாஸ் கிடைப்பதில்லை என்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கால் டாக்சி உரிமையாளர்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து கால் டாக்சி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் லோகநாதன் உள்பட சிலர் மனு கொடுத்தனர். அதில், ஊரடங்கால் கால் டாக்சி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளுக்குநாள் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் கால் டாக்சி உரிமையாளர்கள், டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, சாலை வரி, காப்பீடு மற்றும் வங்கி கடனுக்கான மாத தவணை ஆகியவற்றை ஓராண்டுக்கு தள்ளிவைக்க வேண்டும். கால் டாக்சி உரிமையாளர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் அரசு பணிகளுக்கு எங்களுடைய வாகனங்களை பயன்படுத்தி எங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும். தமிழகத்தில் கால்டாக்சி வாகனங்களை நம்பி 10 லட்சம் குடும்பங்கள் உள்ளன. ஆனால், உண்மையான காரணங்களை கூறி ஆன்லைனில் பதிவு செய்தாலும் இ-பாஸ் கிடைப்பதில்லை. எனவே, கால் டாக்சி வாகனங்களுக்கு தனியாக இணையதளம் உருவாக்கி இ-பாஸ் வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
இதேபோல் பந்தல், அலங்காரம் மற்றும் ஒளி-ஒலி அமைப்பாளர்கள் நலச்சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அதில், ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். தமிழக அரசு அனைத்து தொழில்களுக்கும் 50 சதவீதம் தளர்வு அளித்துள்ளது. ஆனால் எங்களுடைய தொழிலை கண்டுகொள்ளாததால், பின்தங்கிய நிலைக்கு சென்றுவிட்டோம். எனவே, திருமணம் மற்றும் விழாக்களுக்கு 50 சதவீத தளர்வு அளிக்க வேண்டும். மேலும் நலவாரியத்தில் எங்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.
வேடசந்தூரை சேர்ந்த என்ஜினீயர் வெற்றிவேல் உள்பட சிலர் கொடுத்த மனுவில், வேடசந்தூரில் புதிய மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம், மின்கம்பம் நடுவதற்கு ரூ.15 ஆயிரம், விவசாய மின் இணைப்புக்கு ரூ.1 லட்சம் என லஞ்சம் கேட்கின்றனர். அதுபற்றி சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரியிடம் கேட்டால், முறையான பதில் அளிப்பதில்லை. எனவே, மின்இணைப்புக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
குஜிலியம்பாறை தாலுகா டி.கூடலூர் ஊராட்சி பூசாரிபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், பூசாரிபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடத்தை பூட்டி விட்டார் கள். தலைவரின் காசோலை அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது. எனினும், பால் கொள்முதல் செய்து ஆவினுக்கு அனுப்புகிறோம். எனவே, சங்கத்தின் கட்டிடத்தை திறப்பதோடு, தலைவருக்கு காசோலை அதிகாரம் வழங்க வேண்டும். சங்கத்தின் செயல்பாட்டை முறைகேடாக முடக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.