சிவகாசி புதுப்பெண் கொலை நடந்தது எப்படி? கைதான 3 பேர் பரபரப்பு தகவல்

சிவகாசி அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது தொடர்பாக கைதான 3 பேர் போலீசாரிடம் பரபரப்பு தகவலை அளித்துள்ளனர்.

Update: 2020-08-10 22:00 GMT
சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் -ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன் (வயது 26). இவருக்கும் திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்த பட்டதாரியான பிரகதி மோனிகா (24) என்பவருக்கும் 1½ மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் உள்ள மற்ற அனைவரும் வேலைக்கு சென்றிருந்தனர். புதுப்பெண் பிரகதி மோனிகா மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த சிலர், பிரகதி மோனிகாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்து தாலி மற்றும் ஒரு பவுன் தங்கச்சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்த போலீசாருக்கு துப்பு துலங்கியது. பின்னர் மேலும் இரண்டு வாலிபர்களை பிடித்து தனியாக விசாரித்தனர்.

இதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் முழு விவரமும் அவர்கள் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் மற்றும் போலீசார் திருத்தங்கல் - ஆலமரத்துப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் (20), டைசன் என்கின்ற சேகர் (19) ஆகியோர் சிக்கினர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் இருவரும் புதுப்பெண் பிரகதி மோனிகாவை கொலை செய்துவிட்டு நகையுடன் தப்பியவர்கள் என தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்த தங்களுக்கு செலவுக்கு போதிய பணம் இல்லாததால் நகைக்காக வீடு புகுந்து புதுப்பெண் பிரகதி மோனிகாவை கழுத்தை அறுத்து கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த கொலை தொடர்பாக கோடீஸ்வரனின் தாய் பரமேஸ்வரிக்கும் (40) தெரியும் என்று விசாரணையின் போது, கைதான 2 பேரும் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து போலீசார் பரமேஸ்வரியையும் கைது செய்தனர்.

கோடீஸ்வரன் வீட்டிலிருந்து அரிவாள் மற்றும் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் டைசன் என்கின்ற சேகரிடமிருந்து தாலியை கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்