மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணனுக்கு கொரோனா - குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ. ராமரும் பாதிப்பு
மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதே போல் குளித்தலை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன் (வயது 44). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் கொரோனா இருப்பது உறுதியானது.
அதை தொடர்ந்து எஸ்.எஸ்.சரவணன் நேற்று காலை மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து சரவணன் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா தொற்று காரணமாக, டாக்டர்களின் ஆலோசனைப்படியும், என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் மதுரை சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மாணிக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ.வும் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து மதுரை மாவட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர்களுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதிகாரிகள், அ.தி.மு.க.வினர் கலக்கத்தில் உள்ளனர்.
இதே போல் கரூர் குளித்தலை எம்.எல்.ஏ.வும், தோகைமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான ராமரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், பாதிரிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த இவருக்கு, கடந்த 3 நாட்களாக சளி, இருமல் இருந்ததால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ. ராமரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த தாங்கள் பூரண குணமடைந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற நலம் பெற வேண்டும், என்று அவரிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.