நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

Update: 2020-08-10 05:23 GMT
புஞ்சைபுளியம்பட்டி, 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு உயரம் 105 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அதுமட்டுமின்றி ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, கோபி, பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் குடிநீர் வசதியையும் பெறுகின்றன.

இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரானது பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.87 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 602 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 1,100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

நேற்று மாலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 99.87 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 517 கன அடி தண்ணீர் வந்தது.

அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கிட்டத்தட்ட அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிவிட்டது. கடந்த 7 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 14 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்