கோவையில் முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
கோவையில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.
கோவை,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்துடன் இந்த மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை களில் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதனால் கோவையில் பரபரப்பாக காணப்படும் அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடின.
அதுபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகள், காய்கறி சந்தைகள், தினசரி சந்தைகளும் மூடப்பட்டன. கோவை கடைவீதி, ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, நஞ்சப்பா ரோடு உள்பட பல்வேறு இடங்களில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது.
வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் காந்திபுரம் 2-அடுக்கு மேம்பாலம், அவினாசி ரோடு மேம்பாலம், வடகோவை மேம்பாலம் உள்பட அனைத்து மேம்பாலங்களின் முன்பு இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. அதுபோன்று டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் திறக்கப்படவில்லை. அனைத்து முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகள் வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காரணம் இல்லாமல் வெளியே சுற்றியவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். அரசு உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டு உள்ளதா என்று அதிகாரிகள் ரோந்து சென்று கண்காணித்தனர்.
முழு ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் அமைதி நிலவியது. அத்துடன் சாலைகள் வெறிச்சோடியதால், அந்த சாலைகளில் சிறுவர்கள், பம்பரம், கால்பந்து, கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். வாகன சத்தம் இன்றி அமைதி நிலவியதால் சாலைகளில் ஆங்காங்கே ஆடு, மாடு மற்றும் குதிரைகள் சுதந்திரமாக சுற்றித்திரிந்ததை காண முடிந்தது. கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ராட்சத எந்திரங்கள் கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று நடைபெற்றது.