அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று ராணுவ வீரர் மனைவி தற்கொலை - திருமணமான 11 மாதத்தில் பரிதாபம்
அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று ராணுவ வீரர் மனைவி தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த அத்திமூர் வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுகமூர்த்தி. இவரது மகள் சில்பா(வயது 20). இவருக்கும், ஜம்பங்கிபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் செல்வத்துக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சில நாட்களில் செல்வம் வேலைக்கு சென்றார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு 15 நாள் விடுப்பில் கிராமத்திற்கு வந்தார். கணவர் இல்லாத நாட்களில் சில்பா தனது தாய் வீடான வடகாட்டில் பெற்றோருடன் வசிப்பது வழக்கம்.
இந்த நிலையில் ஜம்பங்கிபுரத்தில் உள்ள கணவர் வீட்டில் சில்பா இருந்தார். அப்போது அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் அதிக மாத்திரைகளை தின்று விட்டார். அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்த போது சில்பா மயங்கிய நிலையில் இருந்தார்.
இது குறித்து இவரின் பெற்றோர்களுக்கு தகவல் கூறி, போளூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக அவரை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் சில்பா வரும் வழியிலேயே இறந்து விட்டார் என கூறினர். இது குறித்து போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். சில்பாவுக்கு திருமணமாகி 11 மாதங்களே ஆவதால் ஆரணி கோட்டாட்சியர் மைதிலி மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.