ஆதனக்கோட்டை அருகே, அண்ணனை கொலை செய்ய முயற்சி; தொழில் அதிபர் கைது
ஆதனக்கோட்டை அருகே அண்ணனை கொலை செய்ய முயன்ற தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
ஆதனக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 55). தனது வீட்டிலேயே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் கந்தர்வகோட்டைக்கு சென்று பெட்டிக்கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் முந்திரி தொழிற்சாலை அருகே அவர் வந்துகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது அவர் விலகி கொண்டதால், இரும்பு கம்பியால் தலையில் தாக்க முயன்றனர். அதனை பாஸ்கர், வலது கையால் தடுக்க முயன்றபோது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால், வலியால் அலறிய அவரது சத்தம் கேட்டு வளவம்பட்டியை சேர்ந்த நாராயணன், சித்தார்த் மற்றும் சிலர் அவரை காப்பாற்ற ஓடி வந்தனர். இதனை பார்த்ததும் மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர், அவர்கள் பாஸ்கரை மீட்டு சிகிச்சைக் காக புதுக்கோட் டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஆதனக்கோட் டை போலீசில் பாஸ்கர் கொடுத்த புகாரில், சொத்து பிரச்சினை காரணமாக தனது தம்பி திருநாவுக்கரசு (50) தான் என்னை கொலை செய்ய ஆள் அனுப்பி உள்ளார். இவருக்கு, வளவம்பட்டியை சேர்ந்த கண்ணதாசன்(26), பழனிவேல்(45), ஆகியோர் உடந்தையாக செயல்படுகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பேரில் ஆதனக்கோட்டை போலீசார், திருநாவுக்கரசு, பழனிவேல், கண்ணதாசன் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, கந்தர்வகோட்டையில் திருமண மண்டபம், தங்கும் விடுதி மற்றும் கறம்பக்குடியில் பெட்ரோல் விற்பனை நிலையம் போன்றவற்றை நடத்தி வரும் தொழில் அதிபர் ஆவார். சொத்து பிரச்சினையில் தனது அண்ணனையே தம்பி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.