கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-08-08 22:30 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் நல சட்டங்களை முற்றாக நீக்குவது, 4 தொகுப்புகளாக சுருக்குவது, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். பொது முடக்கத்தால் வருமானம் இழந்த குடும்பங்கள் அனைத்துக்கும் ரூ.37 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பெரம்பலூரில் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலைவர் அகஸ்டின், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் குமார், பழைய பஸ் நிலையம் காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கராஜ், தீரன் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. கிளை செயலாளர் சிங்கராயர் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு, தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூரில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி, தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேந்திரன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டு, கோஷங்களை எழுப்பினர். மதியம் அரியலூர் நகராட்சி அலுவலக வாயிலில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிவஞானம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயங்கொண்டம் போக்குவரத்து கழக தொ.மு.ச. கிளை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். கிளை தலைவர் கொளஞ்சி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சி.ஐ.டி.யு. நிர்வாகி நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தா.பழூர் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் உலகநாதன் கலந்து கொண்டு பேசினார். இதில் துப்புரவு பணிகளில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய செயலாளர் அபிமன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம் நகராட்சி துப்புரவு பணியாளர்களின் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தி விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் தம்பிசிவம் தலைமை தாங்கினார். சங்க தலைவர் கொளஞ்சி முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்