புதுக்கோட்டை அருகே, உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் முதியவர் அடித்துக்கொலை - 2 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு
புதுக்கோட்டை அருகே உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அன்னவாசல்,
புதுக்கோட்டை அருகே வாகவாசலை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 60). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. அதாவதுசுப்ரமணியன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட போது, விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி கலைவாணனை, சுப்ரமணியன், அவரது மகன் விஜயகாந்த், உறவினர் முருகேசன் ஆகியோர் சேர்ந்து கட்டையால் அடித்து தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கலைவாணன் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வெள்ளனூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இறந்த கலைவாணனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று மாலை மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் வழக்கில் தொடர்புடைய சுப்ரமணியன் (55), முருகேசன் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விஜயகாந்தை தேடி வருகின்றனர்.