4 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி-பெங்களூரு இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது

தூத்துக்குடி-பெங்களூரு இடையே 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியது.

Update: 2020-08-09 02:43 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து தினமும் சென்னைக்கு 5 விமானங்களும், பெங்களூருவுக்கு ஒரு விமானமும் என 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதன்மூலம் தினமும் சராசரியாக 700 பயணிகள் பயணித்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தை தொடர்ந்து, கடந்த மே மாதம் 26-ந்ததியில் இருந்து சென்னைக்கு மட்டும் தினமும் 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தூத்துக்குடி-பெங்களூரு இடையே விமான சேவை 4 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. முதல் விமானம் 71 பயணிகளுடன் நேற்று காலை 7.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, காலை 8.35 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது.

கொரோனா பரிசோதனை

தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து காலை 9 மணிக்கு 68 பயணிகளுடன் விமானம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 3 நாட்களும் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் இருந்து வந்த 71 பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர். விமானத்தில் வந்த பயணிகளுக்கு தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள், இல்லையெனில் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

சென்னைக்கு மேலும் ஒரு விமான சேவை

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தற்போது தினமும் 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி-சென்னை இடையே வருகிற 13-ந்தேதி முதல் கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்