தொழிலாளி மர்மச்சாவு: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றேன் கைதான வாலிபர் வாக்குமூலம்

பேரணாம்பட்டு அருகே தச்சுத்தொழிலாளி மர்மமானமுறையில் இறந்த வழக்கில் அவருடைய மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றதாக அவர் கூறினார்.

Update: 2020-08-08 16:54 GMT
பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அடுத்த ராஜக்கல் ஊராட்சி பன்னீர்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மகன் சரவணன் (வயது 38) சென்னையில் தங்கி தச்சுத் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி காமாட்சி (30) என்ற மனைவியும், தினேஷ் (9), திவாகர் (8), குணா (6) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் சரவணன் சென்னையில் இருந்து தனது சொந்த கிராமத்துக்கு வந்திருந்தார். 5-ந்தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சரவணன் மறுநாள் காலை அழிஞ்சிக்குப்பம்-கடாம்பூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் எதிரில் முகம் மற்றும் வலது காதில் ரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரவணனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மனைவியின் கள்ளக்காதலன் கைது

இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனின் மனைவி காமாட்சியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காமாட்சிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சாவுக்கு மேளம் அடிக்கும் தொழிலாளியான மதன் (30) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும், இது தொடர்பாக சரவணன் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி மதனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மதனை பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மதன் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-

கள்ளக்காதலுக்கு இடையூறு

சரவணன் கொரோனா ஊரடங்கால் சென்னையில் இருந்து தனது சொந்த கிராமத்துக்கு திரும்பியதால் கள்ளக்காதலியான காமாட்சியை சந்திக்க முடியவில்லை. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மதனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் மதனின் கள்ளக்காதல் அவருடைய மனைவி மற்றும் பெற்றோருக்கு தெரிந்து மதனை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மதன் சம்பவத்தன்று இரவு மனைவி மீனா மற்றும் பெற்றோரை தாக்கி விட்டு, பின்னர் இரவு 8 மணியளவில் கள்ளக்காதலியான காமாட்சியின் வீட்டுக்கு சென்று அவரது கணவர் எங்கு சென்றார்? எனக் கேட்டு தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.

சரவணன் வீட்டில் இல்லாததால், மதன் தனது மாமா வெங்கடேசன் (40) என்பவருடன் சேர்ந்து மது குடித்து விட்டு இருவரும் சரவணனை தேடி சென்றனர். அப்போது அழிஞ்சிக்குப்பம்-கடாம்பூர் சாலையில் சரவணன் குடிபோதையில் வந்ததை அவர்கள் பார்த்தனர்.

அடித்துக்கொலை

சரவணனை வழிமறித்த மதன், என்னை பற்றி ஊரில் உள்ளவர்களிடம் ஏன் தவறாகப் பேசி வருகிறாய்? எனக் கேட்டு தகராறில் ஈடுப்பட்டார். தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த மதன் மற்றும் அவரது மாமா வெங்கடேசன் ஆகியோர் சரவணனை உருட்டுக்கட்டையால் சரமாரியாகத் தாக்கினர்.

இதில் சரவணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சரவணனின் உடலை அதே இடத்தில் போட்டுவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

தலைமறைவாக உள்ள மதனின் மாமா வெங்கடேசனை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மதனுக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். 

மேலும் செய்திகள்