தற்கொலை செய்த பெண்ணின் உடல் வீட்டு வாசலில் புதைப்பு: பொதுமக்கள் எதிர்ப்பால் சுடுகாட்டில் அடக்கம்
அறந்தாங்கி அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடல் வீட்டு வாசலில் புதைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தோண்டி எடுக்கப்பட்டு சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி சுதா(வயது 32). இவர், கடந்த 5-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சுதாவின் உறவினர்கள் அவரது வீட்டுவாசலில் குழிதோண்டி சுதாவை புதைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிணத்தை தோண்டி எடுத்து சுடுகாட்டில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறந்தாங்கி கோட்டாட்சியர் முருகேசனிடம் நேற்று மனு கொடுத்தனர். அவரது உத்தரவின்பேரில், நேற்று ஆயிங்குடியில் வீட்டின் வாசலில் புதைக்கப்பட்ட சுதாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது சுதாவின் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் சிவக்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேஸ்மா ஆகியோர் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சுதாவின் உடல் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.