ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சம்: புதிதாக 62 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 3 பேர் சாவு
ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 62 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், மாநகராட்சி செயற்பொறியாளர், நகராட்சி ஊழியர்கள், தொழில் அதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்தது. கடந்த 4-ந் தேதி 20 பேரும், நேற்று முன்தினம் 40 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் நிலவரப்படி 829 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 3 பேர் வேறு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதனால் பாதிப்பு 826 ஆக மாறியது. நேற்று ஒரே நாளில் 62 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 888 ஆக உயர்ந்தது.
இதில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் மட்டும் 44 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். மூலப்பாளையம் விவேகானந்தனார் வீதி, பெரியார் நகர், கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் வீதி, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், திண்டல் லட்சுமிநகர், சம்பத்நகர், சூரம்பட்டி பாரிவள்ளல் வீதி, ராஜாஜிபுரம், பி.பி.அக்ரஹாரம், காந்திஜிரோடு, கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரிய பகுதி, சூளை முனியப்பன்கோவில் வீதி, சங்குநகர் 5-வது வீதி, மரப்பாலம் அய்யப்பன் கோவில் வீதி, சாஸ்திரிநகர் காமராஜர் வீதி, நேதாஜிரோடு மோகன் தோட்டம் பகுதி, ஜானகியம்மாள் வீதி, ஆர்.என்.புதூர் ஜவுளி நகர், சூரம்பட்டி அணைக்கட்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் கொடுமுடி முத்துகவுண்டன்பாளையம், சென்னிமலை, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, சித்தோடு போலீஸ் நிலையம், பவானிசாகர், கோபிசெட்டிபாளையம் மணிமேகலை வீதி, அந்தியூர், அத்தாணி என மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை 636 பேர் குணமடைந்து உள்ளனர். 239 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் ஈரோடும் உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தாலும், உயிரிழப்பு குறைவாக இருந்து வந்தது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சித்தோடு அருகே காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்த 75 வயது முதியவர், பவானியை சேர்ந்த 69 வயது மூதாட்டி, ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்த 76 வயது முதியவர் ஆகியோர் கொரோனா பாதிப்பு காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் 3 பேரும் கடந்த 4-ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பில் உயிரிழந்த ஈரோடு நேதாஜி ரோட்டை சேர்ந்த 55 வயது நபரின் விவரம் சுகாதாரத்துறை மாநில பட்டியலில் இன்னும் சேர்க்கப்படவில்லை. இதனால் அந்த பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளதால், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை முதலில் இருந்தே மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதார பணிகள் எந்தவொரு தொய்வுமின்றி தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. மற்ற மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் மாவட்ட எல்லை வழியாக வேலைக்காக மாவட்டத்துக்குள் வந்து செல்கிறார்கள். இதன் காரணமாகவும் தொற்று பரவ வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதேசமயம் தொற்று பரவலை கட்டுப்படுத்த பரிசோதனையும் அதிகரித்து உள்ளோம். தினமும் சுமார் 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு பகுதி உடனடியாக தனிமைப்படுத்தப்படுகிறது. பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.