குமரியில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலி: பாதிப்பு 5,500-ஐ கடந்தது
குமரி மாவட்டத்தில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் பாதிப்பு 5,500-ஐ கடந்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 71 ஆக இருந்தது.
இந்தநிலையில் மேலும் 4 பேரை கொரோனா காவு வாங்கி உள்ளது. அதாவது சாமிதோப்பு பால்நகரை சேர்ந்த 54 வயது ஆண் கடந்த 3-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார்.
இதே போல ராதாபுரத்தை சேர்ந்த 60 வயது பெண்ணுக்கு கடந்த 30-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் கோட்டாரை சேர்ந்த 70 வயது ஆண், சாத்தான்குளத்தை சேர்ந்த 68 வயது ஆண் என மொத்தம் 4 பேர் பலியாகி உள்ளனர். சாத்தான்குளத்தை சேர்ந்தவர் நேற்று காலையில் தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஒரு மணி நேரத்தில் பலியாகிவிட்டார்.
பலியான அனைவருமே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்து இருக்கிறது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 129 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், கொரோனா கவனிப்பு மையங்களிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 451 ஆக இருந்தது. தற்போது பாதிக்கப்பட்ட 129 பேரையும் சேர்த்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 580 ஆக உயர்ந்து உள்ளது.