ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 44 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நேற்று 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,449 ஆக இருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,483 ஆக உயர்ந்துள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 90 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 2,989 பேர் வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 70 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் 160 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 55 பேர் வீடு திரும்பினர். சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்நத 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.