ஊத்தங்கரை அருகே, வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற உறவினர் கைது
ஊத்தங்கரை அருகே வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற உறவினரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பெருமாள் கவுண்டனூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 21). இவர் கடந்த 2-ந் தேதி தனது உறவினர் மகனூர்பட்டியை சேர்ந்த சிவா (35) என்பவருடன் வனப்பகுதிக்கு வேட்டைக்கு சென்றார். அப்போது வலை விரித்த போது மறைந்து இருந்த மர்ம நபர் கமலக்கண்ணனை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இந்த கொலை குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர் கமலக்கண்ணனைஉடன் சென்ற உறவினர் சிவா சுட்டுக்கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான சிவா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நானும், கமலக்கண்ணனும், உறவினர்கள் ஆவோம். மேலும் நாங்கள் காட்டிற்கு அடிக்கடி துப்பாக்கியுடன் வேட்டைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் ஒரு ஆண்டிற்கு முன்பு எனக்கு சொந்தமான துப்பாக்கியை கமலக்கண்ணன் வேறு ஒருவருக்கு விற்று விட்டார். இதனால் எங்கள் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதேபோல எங்களுக்கு பல முறை தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி இரவு மானை வேட்டையாட 2 பேரும் சென்றோம். அப்போது நாங்கள் 2 பேரும் கஞ்சா பயன்படுத்தி இருந்தோம். ஏற்கனவே இருந்த முன்விரோதத்தில் நான் கமலக்கண்ணனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டேன். பின்னர் கமலக்கண்ணன் இறந்த தகவலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்து விட்டு தப்பி ஓடி விட்டேன்.
இவ்வாறு அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சிவா கொடுத்த தகவலின் பேரில் அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் போலீசார் மீட்டனர். இதையடுத்து கைதான சிவாவை போலீசார் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.