மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது

மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது. ஒரே நாளில் 12 ஆயிரத்து 326 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Update: 2020-08-04 19:12 GMT
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் நேற்று புதிதாக 7 ஆயிரத்து 760 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 57 ஆயிரத்து 956 ஆகி உள்ளது.

இதில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 356 பேர் குணமடைந்துவிட்டனர். நேற்று மட்டும் 12 ஆயிரத்து 326 ஆஸ்பத்திரியில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மாநிலத்தில் தொற்றில் இருந்து குணமானவர்கள் சதவீதம் 65.37 ஆக உள்ளது. தற்போது 1 லட்சத்து 42 ஆயிரத்து 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மராட்டியத்தில் நேற்று ஆட்கொல்லி நோய்க்கு 300 பேர் பலியானார்கள். இதனால் மாநிலத்தில் வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 142 ஆக அதிகரித்து உள்ளது. மரணமடைந்தவர்கள் சதவீதம் 3.52 ஆக உள்ளது. மாநிலத்தில் கொரோனா அறிகுறியுடன் தற்போது 9 லட்சத்து 44 ஆயிரத்து 442 பேர் வீடுகளிலும், 43 ஆயிரத்து 906 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மும்பை, தானே நிலவரம்

தலைநகர் மும்பையில் நோய் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று அங்கு மேலும் 709 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை நகரில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல மேலும் 56 பேர் உயிரிழந்ததால் மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 549 ஆக உயர்ந்து உள்ளது. மும்பையில் 90 ஆயிரத்து 960 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 20 ஆயிரத்து 309 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தானே மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கு கீழ் வந்தது. அதன்படி 947 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்து 102 ஆக அதிகரித்தது. மேலும் 35 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 516 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்