மீனவர் வெட்டிக் கொலை: தாழங்குடா கிராமத்தில் 4 இடங்களில் தடுப்பு ஏற்படுத்தி ‘சீல்’ வைப்பு - குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பெண்கள் திரண்டதால் போலீசார் நடவடிக்கை

கடலூர் அருகே மீனவரை வெட்டிக்கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பெண்கள் திரண்டதால் தாழங்குடா கிராமத்தில் 4 இடங்களில் தடுப்பு ஏற்படுத்தி போலீசார் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2020-08-04 05:33 GMT
கடலூர், 

கடலூர் அருகே உள்ள தாழங்குடா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற மாசிலாமணியின் தம்பி மதிவாணனை, 17 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மாசிலாமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாழங்குடா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளுக்கும், மீன்பிடி வலைகளுக்கும் தீ வைத்து எரித்தனர். மேலும் 4 வீடுகளை சூறையாடியதோடு, வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கினர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாசிலாமணி கொடுத்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாழங்குடாவை சேர்ந்த முகிலன், சிவசங்கர், அரசகுமார், வீரசந்திரன், மதன் ஆகிய 5 பேரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் 12 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆறுமுகம் மகன் இளவரசன்(வயது 38), ஜெயபால் மகன் வீரபாண்டியன்(36), தங்கதுரை மகன் அகிலன்(32), வீரராஜேந்திரன் மகன் சூர்யா(22), ஜெயராமன் மகன் பழனி(40) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மதியழகன், சிவபாலன் உள்பட 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் படகு மற்றும் மீன்பிடி வலைகளுக்கு தீ வைத்ததாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாழங்குடா கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தேவனாம்பட்டினத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட அனைவரையும் கைது செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக தாழங்குடா கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டனர். இதைபார்தத போலீசார், கிராமத்தில் இருந்து வெளிவரும் 4 பாதைகளிலும் பேரிகார்டு மூலம் தடுப்பு ஏற்படுத்தி ‘சீல்’ வைத்தனர். கிராமத்தில் இருந்து யாரையும் வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பெண்களை கலைந்துபோக செய்தனர். இதனால் அந்த கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்