பழனியில் சாலை விரிவாக்க பணி: பெரியார் சிலையை அகற்றக்கோரி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் - எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.-கூட்டணி கட்சியினர் மறியல்

பழனியில், பெரியார் சிலையை அகற்றக்கோரி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-08-04 05:33 GMT
பழனி, 

பழனி நகரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.58 கோடியில் சாலை விரிவாக்கம், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பா.ஜனதா, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் பழனி ஆர்.எப்.ரோட்டில் திடீரென திரண்டனர். பின்னர் பழனி நகரில் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோரத்தில் இருந்த கோவில்கள் அகற்றப்பட்டன. ஆனால் ஆர்.எப்.ரோட்டில் உள்ள பெரியார்சிலை மட்டும் அகற்றப்படாமல் உள்ளது.

எனவே பெரியார் சிலையையும் அகற்றிவிட்டு சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறித்து தகவலறிந்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் பெரியார் சிலையை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அருகருகே நடந்த இந்த போராட்டங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே அங்கு வந்த பழனி சப்-கலெக்டர் (பொறுப்பு) அசோகன், தாசில்தார் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்