திருவண்ணாமலை, வேலூரில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
திருவண்ணாமலை, வேலூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை,
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று, இந்தியாவிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்த தொற்றால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நோய் தடுப்புக்காக மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் கொரோனாவின் வேகம் அதிகரித்துக்கொண்டே போகிறது.
இதுபோல் வேலூர்-திருவண்ணாமலை மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. வேலூர்-திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர்.
அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-
ஆரணி விண்ணமங்கலத்தை சேர்ந்த 63 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்த 70 வயது முதியவர், கொரோனா தொற்றுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செய்யாறு பகுதியை சேர்ந்த 51 வயது ஆண் கடந்த 27-ந்தேதி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
செய்யாறு அருகே உள்ள பொர்காத்தூர் பகுதியை சேர்ந்த 58 வயது ஆண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல வேலூர் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-
ஆரணி தாலுகா துருகம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் (75) என்பவர் கடந்த மாதம் 18-ந்தேதி கொரோனா தொற்று சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஓரிக்கை நக்கீரன் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (76). இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (70). இவர், கடந்த 1-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (70). இவர், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல் ராணிப்பேட்டையை சேர்ந்த சம்பந்தன் (70), வேலூர் பகுதியை சேர்ந்த பழனி (55) ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.